Club2Care In The News

This article appeared in Tamil Murasu on 22 December 2018.

22

Dec

ப. பாலசுப்பிரமணியம்

இம்மாதம் வெளிவந்த 2016ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சிங்கப்பூர் மனநல ஆய்வின்படி, சிங்கப்பூரில் ஏழில் ஒருவர் தமது வாழ்நாளில் மனச்சோர்வு, மிதமிஞ்சிய மது பாணப் பழக்கம், “ஒசிடி” எனும் கட்டுப்படுத்த இயலாத கட்டாய மனப்போக்கு ஆகிய பிரச்சினைகளை அனுபவித்திருப்பர் எனத் தெரிய வந்தது.

 

இந்திய சமூகத்தினரிடையே மனநலப் பிரச்சினைகள் உண்டு. ஆனால் அதற்குத் தீர்வு காண அவர்கள் எளிதில் உதவி நாடுவதில்லை என்பதை உணர்ந்து ‘கிளப்2கேர்’ எனும் மனநல ஆதரவுச் ச்ங்கத்தை இருவர் கடந்தாண்டு தொடங்கினர்.

 

இந்தக் குழுவின் நோக்கம் மருத்துவமனைக்கு வராத மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதாகும்.

 

மனநல மருத்துவர்கள், தாதியர்கள், சமூக ஊழியர்கள் போன்ற தொண்டூழியர்களைக் கோண்டு சமூக நிகழ்ச்சிகள், வழிபாட்டு இடங்கள் போன்ற பொது இடங்களுக்கு வரும் சமூகத்தினரிடையே மனநலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதில் சங்கத்தினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

 

அதோடு, இச்சங்கத்தில் இடம்பெறும் மனநல நிபுணர்களின் ஏற்பாட்டில் மனநல ஆரோக்கியம் தொடர்பான பேச்சுகளும் கருத்தரங்குகளும் தீவின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

 

சமூக அமைப்புகள், மக்கள்கழக நற்பணிப் பேரவை, வழிபாட்டு இடங்கள் போன்ற பங்காளிகளுடன் இணைந்து இவர்கள் மனநல ஆரோக்கியத்தின் விழிப்புணர்வை சமூகத்தினரிடையே கொண்டுபோய் சேர்க்கின்றனர்.

 

தற்போது சங்கத்தில் 50 தொண்டூழியர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். மனநலப் பிரச்சினைகள் கோண்டவர்கள் தக்க நேரத்தில் உதவி நாடினால் தகுந்த சிகிச்சை பேற்று விரைவில் சமுதாயத்தில் இயல்பான வாழ்க்கையை நடத்தலாம். பல ஆண்டுகள் அதற்கு தீர்வுகாணாத பட்சத்தில், அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவது சற்று கடினமாகும் என தெரிவித்தார் இச்சங்கத்தைத் தோன்றுவித்த தலைவர் டாக்டர் ஜெயராமன் ஹரிராம்.

 

மனநலக் கழகத்தின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றும் இவர், தமது அனுபவத்தில் மனச்சோர்வு, மதுபானப் பழக்கம் தொடர்பான பிரச்சினைகள் சமுகத்தினரிடையே சற்று அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

 

“மனநலப் பிரச்சினைக்கு உதவிக்கரம் நீட்ட சிங்கப்பூரில் அமைப்புகள் உள்ளன என்றாலும் தங்களது தாய்மொழியில் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டால் மக்களும் இன்னும் ஆறுதலாக இருக்கும். அவ்வகையில் சமூகத்தினரின் தேவைகளை அறிந்து அவர்கள் பேசும் இந்திய மொழிகளில் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளும் தளமாக இச்சங்கம் விளங்குகின்றது,” என்றார் இச்சங்கத்தின் இணை நிறுவனரான திருமதி லலிதா சுப்ரமணி.

 

மனநலக் கழகத்தில் பணியாற்றும் சங்கத்தின் செயலாளரான டாக்டர் நிகிலா ரவிச்சந்திரன், டெசன்சன் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் மனநலப் பிரச்சினை உடையவர்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு அங்கு வரமுடியாதவர்களை விட்டிலேயே போய் ச்ந்திக்கவும் தொண்டூழியர்கள் தயாரகவுள்ளதாக்க் குறிப்பிட்டார்.

 

அடுத்தாண்டு குறிப்பிட்ட மனநலப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதரவுக் குழுக்களையும் அமைக்க சங்கம் எண்ணம் கொண்டுள்ளது.

 

இச்சங்கத்தில் தொண்டூழியர்களாகச் சேர விரும்புவோர் அல்லது உதவி நாட விரும்புவோர் https://www.club2care.com எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

​படம்: கடந்த செப்டம்பர் மாதத்தில் கெபுன் பாரு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த சுகாதார விழாவில் 'கிளப்2கேர்' தொண்டூழியர்கள் மனநலப் பரிசோதனையை மேற்கொண்டனர். 38 பேர் இந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டனர்.

  • Facebook Social Icon

For immediate assistance in a crisis, call:

Samaritans of Singapore

1800 221 4444

Institute of Mental Health (24h hotline)

6389 2222