Peer stories

Read the English version of this story.

15

April

ஆனந்த் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) -

ஒரு வருடத்திற்கு முன் யாராவது ஆனந்தைப் பார்த்திருந்தால் வேலையிடத்தில் சந்திக்கும் ஒரு தொழில் நிபுணராகவோ, கடைத்தொகுதிகளுக்குத் தங்கள் பிள்ளைகளுடன் வரும் ஒரு குடும்பத் தலைவர் என்றோ தான் நினைத்திருப்பார்கள். ஆனால் அந்தச் சாதாரண வாழ்க்கை முறைக்குப் பின்னால் சிறு வயதில் இருந்தே அவருக்குள் எப்போதும் மனப்போராட்டம்  இருந்துவந்துள்ளது.

வளரும் பருவம்

 

குறைந்த வருமானம் பெறும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திற்கு, சிறுவனாக இருந்த போது வீட்டில் பெற்றோர்களின் அதிகாரமுறை மாறுபட்டதாகவும் குழப்பம் அளிப்பதாகவும் இருந்தது. அவரது தாயார் கெடுபிடியுடன் வீட்டை நிர்வாகிக்கும் நபராக இருந்தார். அவர் தந்தை ஆனந்திற்கு ஒரு நல்ல முன் மாதிரியாக இல்லாமல் பயந்த சுபாவமுடையவராகவும், தொடை நடுங்கியாகவும் இருந்தார். ஆனந்திற்குப் பெற்றோர்களிடம் ஒட்டுதல் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த அவர் மற்றவர் ஆட்டுவித்தால் அவர் சொல்படி நடப்பவராகவும் பயந்த சுபாவம் உடையவராகவும் இருந்தார். தன் கனவுலகத்தில் மாறுபட்ட ஓர் தனி உலகத்தை உண்டாக்கி தன் குடும்பம் மற்றும் சுற்றுச்சூழலில் இருந்து தனித்து இருக்க ஆரம்பித்தார். தன் வயதொத்த இளைஞர்களைப் போல் நண்பர்களுடன் எங்கும் வெளியே சென்றதில்லை. சிறிய மற்றும் பெரிய நிகழ்வுகளைப் பற்றிய நினைவில் மூழ்கி அதைப்பற்றியே யோசித்தபடியும் இருப்பார். பெரும்பான்மையாக இந்த நிகழ்வுகள் மகிழ்ச்சியற்ற சம்பவங்களைப் பற்றித் தான் இருந்தன. இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவரால் சரியாக உறங்க முடியவில்லை. சொந்த நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டால்கூட அவருடைய மகிழ்ச்சியான மனநிலை சில மணி நேரங்களுக்கு மேல் நீடித்ததில்லை.

ஆனந்தின் வீட்டுப் பொருளாதார நிலை காரணமாக அவரால் உயர் நிலைப் பள்ளிக்கு மேல் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியவில்லை. தன் அண்டை வீட்டார் அறிமுகத்தால் கணினி வகுப்பில் சேர்ந்தார். இயற்கையிலேயே  அவருக்குக் கணினித்துறையில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. அவர் அதில் தேர்ச்சி பெற்று பயிற்றுவிப்பாளரானார். வேலையில் தொடர்ந்து முன்னேறி  மேல் மட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். பெற்றோர் ஏற்பாடு செய்த பெண்ணைப் பத்து ஆண்டுகளுக்கு முன் மணம் புரிந்தார். அவர்களுக்குப் பள்ளி செல்லும் வயதில் இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

 

குடிப்பழக்கம்

 

ஆனந்தின் மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள், மற்றவர்களுடன் அதிகம் பேசாத அவரைக் கூச்ச சுபாவம் உடையவராகக் கருதினார்கள். அது ஒரு குறைபாடாக மற்றவர்களுக்குத் தெரியவில்லை. ஆனந்தின் வாலிபப் பருவத்திலும், வேலை மற்றும் மணவாழ்க்கைக் காலங்களிலும் அவர் மனதில்  குழப்பங்கள் நிறைந்திருந்தன. இதனால் கனவுலகத்தில் திளைத்திருப்பது, மனக்குரல்கள், மிகுந்த யோசனை, தன்னைச் சுற்றி நடக்கும் சமூக நடப்புகளில் ஈடுபாடு இல்லாமல் இருத்தல் போன்ற மன உளைச்சல்கள் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் சிரமப்படுத்த விரும்பாத அவர் தன் மனநிலையைப் பற்றி அவர்களிடம் சொல்லவில்லை. அவர்களால் தன்னைப் புரிந்து கொண்டு தனக்கு உதவ முடியாது என்று அவர் நம்பியதும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதற்கு வடிகாலாக குடிப்பழக்கம் ஏற்பட்டு ஒவ்வொரு மாலையும் குடிக்கத் தொடங்கினார்.

ஆனந்தின் குழந்தைகள் வாயிலாக அவர் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவர்கள் வளர்வதைப் பார்க்கும் போது தன் வாழ்வில் தன் தந்தை முன் மாதிரியாக இல்லாமல் இருந்தது அவர் நினைவுக்கு வந்தது. தன் குழந்தைகளுக்கு அந்த நிலை வரக்கூடாது என்ற எண்ணம் உண்டானது. தன்னைத்தானே திருத்திக் கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த முன் மாதிரித் தந்தையாக இருக்க விரும்பினார். புத்தகங்களைப் படித்தும், வலைத்தளங்களைப் பார்த்தும் தனது தற்போதைய மனநிலை அவருடைய இயற்கை சுபாவம் இல்லை என்றும் அவருடைய மனக்குறைகளே அவை என்றும் புரிந்து கொண்டார். அந்தக்  கருத்தை அவர் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. தன் நிலை புரிந்தபோதும் உதவியை நாடாமல் தனிமையில் தவித்தார். அவர் மனைவி குடிப்பழக்கத்திற்குத் தடை விதித்த போது அவருக்குத் தெரியாமல் குடித்துவந்தார். இது தன்னுடைய சொந்தப் பிரச்சினை என்பதால் மற்றவர்களுக்குச் சிரமம் கொடுக்க ஆனந்த் விரும்பவில்லை.

 

தீவிர மன அழுத்தம்

 

ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு உடல்நலப் பரிசோதனையின்போது  மனநலத்தைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்வியால் ஆனந்தின் பிரச்சினை வெளியே தெரிய வந்தது. மதிப்பீட்டில் ஆனந்தின் மனப்படபடப்பும், மன அழுத்தமும் அதிக அளவில் இருந்ததால் மருத்துவர்கள் மனநலப் பரிசோதனையைப் பரிந்துரைத்தார்கள். நல்ல வேளையாக உடல் நலத்தைப் போலவே மனநலத்தையும் சிகிச்சையின் மூலம் குணமாக்க முடியும் என்று அறிந்திருந்ததால் அவர்  மேற்படி சிகிச்சைக்குச் சம்மதித்தார். மருத்துவருடன் பலமுறை கலந்து பேசிய பிறகு  அவர் “டிஸ்தைமியா” என்ற தீவிர மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.  தன் மனநிலைபற்றி நன்கு அறிந்திருந்த அவர், மருத்துவச் செலவை ஈடுகட்ட முடியுமா என்ற கவலை இருந்தாலும் சிகிச்சையை மேற்கொள்ளத் தயாரானார்.

எட்டு மாதங்களுக்கு முன் ஆனந்திற்கு மன அழுத்தத்தை நீக்க மருந்துகளும், பேச்சு சிகிச்சையும் ( சைக்கோதெரபி) அளிக்கப்பட்டன.  மருத்துவர் அவருடைய வாழ்க்கை முறையைத் திருத்தி அமைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். மாலை வேளையில் எப்போதெல்லாம் குடிக்கத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மெதுவோட்டம் ஓட அறிவுறுத்தினார். வீடு மற்றும் வேலையைத் தவிர அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வளர்த்துக் கொள்ளச் சொன்னார். அதைத் தவிர “மைண்ட் டூல்ஸ்” என்னும் கைத்தொலைபேசிச் செயலியைப் பயன்படுத்தத் தெரிந்து வைத்திருந்தார். அவர் மனம் தொய்வு அடையும் போதெல்லாம் தன் எண்ணங்களை “தாட் டயரி” என்ற எண்ணக்கையேட்டில் பதிவு செய்வார். அது தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும். மேலும் புத்தகம், வலைத்தளப் பதிவுகள், “டேட் டாக்” (Ted-talks) ஆகியவற்றின் மூலம் மனநலனைப் பற்றிய விழிப்புணர்ச்சியை வளர்த்துக் கொண்டார். அத்துடன் தன்னூக்கத்தையும் தனக்கு அரணாக அமைத்துக் கொண்டார்.

 

குடிப்பழக்கத்திலிருந்து மெதுவோட்டம்

 

ஆனந்த் மருத்துவரின் பரிந்துரைகளை ஏற்று தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து தன்னைத் திருத்திக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். ஆரம்பத்தில் அவை கடினமாகவும், மனதுக்குப் பிடிக்காமலும் இருந்த போதிலும் மனம் தளராமல் செயல்பட்டார். எவ்வளவு மோசமாக எதிர்பார்க்க முடியுமோ அதை மனதில் வைத்தால் அந்த நடவடிக்கையைச் செய்யும் போது கடினமாக இருக்காது என்று எண்ணினார். உதாரணமாக மெதுவோட்டம் ஓடும் போது உடல் கஷ்டத்தை முற்றிலும் எதிர்பார்த்து ஓடுவார். ஓடும் போது அதிக சிரமம் இல்லாமல் இருந்தால் அதுவே தனக்குக் கிடைத்த பரிசாக ஏற்றுக்கொள்வார். தன் உடல் நலத்தைக் கண்காணிக்க ஓடும் போது “டிராக்கர்” கருவியைப் பயன்படுத்துவார். பொழுதுபோக்கு, முழு மனதுடன் செயலில் ஈடுபடுவது, தேவையற்ற சிந்தனைகளைத் தடுப்பது, நல்ல தூக்கம் மற்றும் கொழுப்பைக் குறைப்பது போன்றவை மெதுவோட்டம் ஓடுவதால் ஏற்படும் சிறந்த பயன்கள். இந்த மெதுவோட்டப் பழக்கத்தால் அவர் மதுப்பழக்கம் தொண்ணூறு சதவிகிதம் குறைந்தது.

மற்றொரு நடவடிக்கையாக நினைவுச்சின்னப் பொருட்கள் சேகரிப்பதைப் பொழுதுபோக்காக அமைத்துக் கொண்டார். அவற்றைச் சேகரிப்பதற்காக முற்றும் அறிமுகமில்லாத நபர்களிடம் பேசிக் கலந்துரையாட நேரிட்டது. அதனால் அவருடைய நண்பர்கள் மற்றும் சமூக வட்டம் பெருகியது. இந்தக் கூட்டு விருப்ப நடவடிக்கை அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்பொழுதும் அந்தப் பொருட்களைப் பற்றிப் பேசும் போது அவற்றைச் சாதாரணப் பொருட்களாகக் கருதாதது மட்டுமன்றி அவற்றின் பின்னணியில் இருந்த நினைவுகள்  இன்றும் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றன என்பதை உணரலாம்.

மருந்துகளினால் ஏற்பட்ட பின் விளைவுகளைச் சமாளித்தல் ஆனந்திற்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள் ஆரம்பத்தில் அவருக்கு களைப்பு, பசி, தூக்கம், வாய்வுத்தொல்லை போன்ற உபாதைகளை ஏற்படுத்தின. அவற்றைக் குறைக்க மருத்துவர் வேறு மருந்துகளைக் கொடுத்தார். உடல் பருமன் போன்ற பின் விளைவுகளைக் குறைக்க அவர் விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபட்டார். ஆனந்தின் விடாமுயற்சியும் மருத்துவரின் ஆலோசனைகளும் அவருக்குப் பின் விளைவுகளைச் சமாளிக்க உதவி புரிந்தன. இவையாவும் தீவிர மன அழுத்தத்திலிருந்து அவரை மீட்டுள்ளன. அவர் இன்னும் சில காலத்திற்குச் சிகிச்சையைத் தொடர நினைத்துள்ளார். மீண்டும் பழைய மனநிலை ஏற்படாமலிருக்க மெதுவோட்டம் போன்ற பயிற்சிகள் மேற்கொண்டு பயனுள்ள வாழ்க்கை முறையைத் தொடர முனைந்துள்ளார். ஏதேனும் மனக்குறை எனவொன்று அவருக்கு இருந்திருந்தால் அது மருத்துவ சிகிச்சையை முன்னரே தொடங்காமல் இவ்வளவு காலம் வீணாக்கிவிட்டோமே என்பதேயாகும்.

உடல் நலத்தைப் பற்றிய கேள்வித்தாள் மூலம் ஆனந்த் தன் மனநலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நேர்ந்தது அவரது அதிருஷ்டமேயாகும். அது ஏற்படாவிட்டால் இவ்வளவு காலமும் அதே மனநிலையில் உழல நேர்ந்திருக்கும். தன் பிரச்சினையைப் பற்றி முன்னரே அறிந்திருந்த அவர் அதைத் தீர்க்கும்  வழி தெரிந்தவுடன்  வெட்கப்படாமல், முழு நம்பிக்கையுடன் சிகிச்சையை நாடினார். விடாமுயற்சியுடன் மருத்துவ உதவியை நாடிப் பயனடைந்த அவர் தன்னைப் போல் மன அழுத்தத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கும் மூன்று அறிவுரைகள் :

உடல் நலக் குறைவு போலவே தான் மனநலக் குறைவும் - தகுந்த சிகிச்சையின் மூலம் பூரண குணம் அடைய முடியும்.

தனது மனநலத்தைப் பற்றித் தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருக்காமல் தயங்காமல் மருத்துவரிடம் சொல்வது மிகவும் அவசியம்.

தன்னாலேயே குணமடையும் என்று காத்துக் கொண்டிருக்காமல் தயங்காமல் உடனடியாக மருத்துவ உதவியை  நாடுவது மிகவும் முக்கியம்.

 

ஆனந்தைப் பற்றி அவருடைய மனநல மருத்துவர்

 

ஆனந்திற்கு அளிக்கப்பட்ட  சிகிச்சை குறுகிய காலத்திலேயே நல்ல பலனைக் கொடுத்தது. முதன் முதலில் அவர் சிகிச்சைக்கு வந்த போதே தன் மனநிலையைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மிகக் கடுமையான நிலையில் இல்லையென்றாலும் அது அவரைக் குடும்பத்திலும் வேலையிடத்திலும் சரிவர இயங்க முடியாமல் தடுத்தது. தனக்கு மருத்துவ உதவி தேவை என்று முழுமையாக நம்பியதால் சிகிச்சை அவருக்குப் பலன் அளித்தது. மிகுந்த ஊக்கத்துடன் தனக்குக் கொடுக்கப்பட்ட விவரங்களை விழிப்புணர்வுடன் பின்பற்றிப் பயனடைந்தார். தன் நினைவுகளுக்கும் நடவடிக்கைகளுக்குமிடையே ஏற்பட்ட தேவையில்லாத எண்ணங்களை நீக்க மற்றவர்களின் உதவியுடன் நல்ல வழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டார். உடற்பயிற்சி சிறந்த முறையில் அவருடைய மனநலத்திற்கு உதவியதைப் புரிந்து கொண்டார். வலைத்தளத்தில் “மூட்டூல்ஸ்” (mood tools) என்ற கட்டணமில்லாத செயலியின் வழியாக தூக்கமின்மை, பதட்டவுணர்வு, உடற்பயிற்சி ஆகியவற்றைப் பற்றி ஆர்வத்துடன் அறிந்து கொண்டார்.

மனநலன் ஒருவர் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமான அம்சம் என்பதை ஆனந்தின் வாழ்க்கைப்பயணத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. நமக்கு மற்றவரின் உதவி தேவைப் படுகிறது என்று சொல்ல வெட்கப்பட வேண்டியதில்லை. நல்ல உணவுப் பழக்கத்தின் மூலம் உடல் நலனைக் காப்பது போல் விடாமுயற்சியுடன் கஷ்டங்களைச் சமாளித்து மனநலனைப் பேண முடியும்.

Anand was interviewed by Bhanu Ramchandran.

Tamil translation by Vardhini Subramanian and Kasthuri Subramaniam.

 

Join the Club2Care community on PatientsEngage.